வாகனம் நிறுத்துமிடமாக மாறிய பஸ் நிலையம்
சிங்கம்புணரியில் வாகனம் நிறுத்துமிடமாக பஸ் நிலையம் மாறி வருகிறது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் வாகனம் நிறுத்துமிடமாக பஸ் நிலையம் மாறி வருகிறது.
வாரச்சந்தை
சிங்கம்புணரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 25000 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். சிங்கம்புணரியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விளைகின்ற விளை பொருட்கள் அனைத்தும் சிங்கம்புணரியில் உள்ள வாரச்சந்தையில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்த வாரச்சந்தை சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகில் நடைபெற்று வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பொதுமக்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வருபவர்களின் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வாரச்சந்தைக்குள் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.
பஸ் நிலையம் ஆக்கிரமிப்பு
இந்நிலையில் வாரம்தோறும் சந்தைக்கு வருபவர்கள் பலரும் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பஸ் நிலையம் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது. மேலும் பஸ் நிலையம் ஆக்கிரமிக்கப்பட்டு பஸ்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதே போல பஸ் நிறுத்தும் இடத்தின் அருகில்தான் காய்கறி வாகனங்களையும் நிறுத்தி காய்கறிகளை இறக்குகின்றனர்.
பஸ் நிலையம் இருசக்கர வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் வெளியூர்களில் இருந்து வருகின்ற அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளே நிறுத்த இடமில்லாமல் வெளியே அண்ணா சிலை முன்பு நிறுத்தி பயணிகளை இறக்கி செல்கின்றது. இதன் காரணமாக பஸ் நிலையத்திற்குள் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
அபராதம்
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், வாரம் தோறும் வியாழக்கிழமை சிங்கம்புணரி பஸ் நிலையம் இருசக்கர வாகன நிலையமாக மாறிவருகிறது. சந்தைக்கு வருகின்றவர்கள் இருசக்கர வாகனங்களை இங்கு நிறுத்தி செல்வதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
சில பஸ்கள் உள்ளே வராமல் சென்றுவிடுவதால் பயணிகள் தங்கள் பஸ்களை தவறவிடும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து போக்குவரத்து போலீசாரும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.