படிக்க செல்ல பஸ் வசதி இல்லை; படியில் தொங்கும் மாணவர்கள்


படிக்க செல்ல பஸ் வசதி இல்லை; படியில் தொங்கும் மாணவர்கள்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் படிக்க செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கி பயணிக்கும் நிலை உள்ளது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில் படிக்க செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கி பயணிக்கும் நிலை உள்ளது.

போதிய பஸ் வசதியில்லை

காரைக்குடி நகர் கல்வி நகரமாக திகழ்ந்து வருவதால் தமிழகத்தில் ஏராளமான மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி, அழகப்பா உடற்பயிற்சி கல்லூரி, அழகப்பா மாதிரி மற்றும் மெட்ரிக் பள்ளி, உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி உள்பட ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களில் நகர் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படிப்பதற்காக வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் மாணவர்கள் டவுண் பஸ்கள் மூலம் அதிகளவில் வருகின்றனர். ஆனால் அவ்வாறு வரும் மாணவ, மாணவிகளுக்கு போதிய அளவு டவுண் பஸ்கள் வசதி இல்லை.

இதன் காரணமாக கல்லூரிக்கு செல்லும் நேரத்திலும், கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்லும் நேரத்திலும் ஏராளமான மாணவ, மாணவிகள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் அதில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பஸ்களில் ஏற மாணவ, மாணவிகள் முண்டியடித்துக்கொண்டு செல்கின்றனர். அப்போது சிலர் கீழே விழுந்து காயம் அடையும் சம்பவமும் தினமும் நடக்கிறது.

விபத்து அபாயம்

மேலும் மாணவர்களின் கூட்டத்தை பார்த்்ததும் டிரைவர்கள் சிறிது தூரம் தள்ளி சென்று பஸ்சை நிறுத்துவால் அவர்கள் ஓடி சென்று ஏறும் நிலை உள்ளது. சில நேரங்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நிற்காமலேயே சென்று விடுகின்றனர். எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் கூடுதலாக டவுண் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவிகள் தரப்பில் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கல்லூரி மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது:-

பிரகாஷ் (சமூக ஆர்வலர்) :- காரைக்குடி கல்லூரி சாலையில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அரசு டவுண் பஸ்களில் இலவச பயணம் மேற்கொண்டு வருவதால் அதிகளவில் மாணவிகள் இந்த பஸ்சை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி விடும் நேரத்தில் போதிய அரசு டவுண் பஸ்கள் இல்லாமல் இடம் பிடிக்க மாணவிகள் அடித்து பிடித்து ஏறவேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் நிலை தடுமாறி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதை தடுக்க கூடுதல் பஸ்சை இயக்க வேண்டும்.

நடவடிக்கை தேவை

நர்மதா (கல்லூரி மாணவி) :- மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த என்னை போன்ற மாணவிகள் அரசு பஸ்சை தான் அதிகளவில் பயன்படுத்தி வருகிறோம். போதிய பஸ்கள் இல்லாததால் மிகவும் கஷ்டமான நிலையை சந்தித்து வருகிறோம். இதுதவிர அந்த பகுதியில் வரும் டவுண் பஸ்சின் டிரைவர் பஸ்சில் கூட்டம் ஏறுவதை தடுக்கும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சற்று தொலைவில் நிறுத்துகிறார். இதனால் அடித்து பிடித்து ஓடிச் சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது.

முகமதுகனி (சமூக ஆர்வலர்) :- ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகளில் இலவச பஸ்சில் வந்து படித்து செல்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது கூடுதலான பஸ்களை இயக்க வேண்டும். ஒரு சில பஸ்களை இயக்குவதால் அந்த பஸ்சில் இடம் கிடைக்காமல் சில நேரங்களில் மாணவர்களும், மாணவிகளும் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பாக இதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story