பாம்பன் ரெயில் தூக்குப்பால தொழில்நுட்ப கோளாறை உடனே சரிசெய்ய வேண்டும்


பாம்பன் ரெயில் தூக்குப்பால தொழில்நுட்ப கோளாறை உடனே சரிசெய்ய வேண்டும்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் ரெயில் தூக்குப்பால தொழில் நுட்பகோளாறை உடனே சரிசெய்ய வேண்டும் என தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கைஜின்னா கோரிக்கை வைத்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பன் ரெயில் தூக்குப்பால தொழில் நுட்பகோளாறை உடனே சரிசெய்ய வேண்டும் என தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கைஜின்னா கோரிக்கை வைத்துள்ளார்.

உள்ளூர் பக்தர்கள்

ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த சில மாதங்களாகவே கோவில் துணை ஆணையரால் கோவிலின் பிரகாரங்களில் பல இடங்களில் கம்பிகள் வைத்து பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி மற்றும் அம்பாள் சன்னதிகளை தவிர மற்ற சன்னதிகளுக்கு தரிசனம் செய்ய முடியாமல் உள்ளனர். மேலும் உள்ளூர் பக்தர்கள் தரிசனமே செய்ய முடியாத அளவிற்கு விஸ்வநாதர் சன்னதி அருகே வழக்கமான பாதையும் கோவில் நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது.

ராமேசுவரம் கோவிலில் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நடைமுறைகளை மாற்றாமல் உள்ளூர் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்த பாதையிலேயே நிரந்தரமாக தரிசனம் செய்துவர அனுமதிக்க அரசும், இந்துஅற நிலையத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரம் கோவிலில் உள்ளூர் பக்தர்களையும், பொதுமக்களையும் அரவணைத்து செல்லும் வகையில் புதிதாக அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.

பாம்பன் ரெயில் தூக்குப்பாலம்

பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய ரெயில்வே துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ரெயில் போக்குவரத்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இயக்கப்படாமல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்து வழக்கம்போல் ராமேசுவரம் வரை பயணிகள் ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.

கடலில் கட்டப்பட்டு வரும் பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் மாவட்டத்தில் நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.

படகுகளை மீட்க வேண்டும்

ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் பணி சரியான முறையில் செயல்படுத்தப்படாததால் நகரின் பல்வேறு இடங்களிலும், முக்கிய சாலைகளிலும் கழிவு நீர் ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அரசுடைமை ஆக்குவதை இலங்கை அரசுக்கு தே.மு.தி.க. கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். இதை உடனடியாக தடுத்து நிறுத்தி இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் மீட்டு தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு, மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story