மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை ஜல்லிக்கட்டு என பெயர் மாற்றம் செய்யக்கூடாது கலெக்டரிடம் வலியுறுத்தல்
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை ஜல்லிக்கட்டு என பெயர் மாற்றம் செய்ய கூடாது என்று மஞ்சுவிரட்டு பேரவை சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சிவகங்கை
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை ஜல்லிக்கட்டு என பெயர் மாற்றம் செய்ய கூடாது என்று மஞ்சுவிரட்டு பேரவை சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குறை தீர்க்கும் கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 343 மனுக்கள் பெறப்பட்டது.
அந்த மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பெயர் மாற்றம் செய்யக்கூடாது
கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட மஞ்சுவிரட்டு பாதுகாப்பு பேரவை சார்பில் தலைவர் ஆறுமுகம் சேதுராமன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
எங்களது பாரம்பரியமான மஞ்சுவிரட்டை ஜல்லிக்கட்டு என மாற்றி நடத்த அறிவுறுத்துவதை கைவிட வேண்டும், மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளைகளுக்கு துண்டு மட்டுமே பரிசாக வழங்கப்படும். விலையுயர்ந்த பரிசு பொருட்கள் கொடுப்பதால் மஞ்சுவிரட்டு சூதாட்டமாக மாறி வருகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மஞ்சுவிரட்டை மாலை வரை நடத்த அனுமதிக்க வேண்டும். வாகனங்களில் காளைகளை கொண்டு வருவதை போலீசார் தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்கின்றனர். ஆண்டு முழுவதும் நடைபெறும் மஞ்சுவிரட்டை 5 மாதங்களுக்கு மட்டும் நடத்த வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய அரசு வலியுறுத்த வேண்டும். இதுவரை மஞ்சுவிரட்டு சம்பந்தமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.