மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை
மேகதாலு அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.
மேகதாலு அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்-அமைச்சருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்து உள்ளது.
மேகதாதுவில் அணை
இது தொடர்பாக காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், முன்னாள் சிவகங்கை நகர சபை தலைவருமான அர்ஜுனன் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
கர்நாடக சட்டசபையில் கடந்த 17-2-2023 அன்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்தார். அவருடைய பட்ஜெட் உரையில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேகதாது அணை கட்டப்படும் என்றும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கிய 1000 கோடி ரூபாயில் பணிகள் தொடங்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் 67 டி.எம்.சி. தண்ணீரை தேக்கக்கூடிய மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறும்.
விவசாயிகள் கண்டனம்
காவிரி நீர் பங்கீடு சம்பந்தமாக தமிழ்நாட்டின் உரிமைகள் ஏற்கனவே கொஞ்சம், கொஞ்சமாக பறிக்கப்பட்டு வருகிறது.
2007-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவை உச்ச நீதிமன்றம் 2018-ம் ஆண்டு 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சி.ஆக குறைத்து விட்டது.
ஆறுகளின் இயற்கையான பாசனத்தில் கீழேயுள்ள மாநிலங்களின் பூர்வீக நீர்ப்பாசன உரிமை பாதிக்கப்படும் எந்த திட்டத்தையும் மேலேயுள்ள மாநிலங்கள் தன்னிச்சையாக செய்யக்கூடாது என்பது சட்டரீதியானது மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள கோட்பாடாகும்.
இந்நிலையில் கர்நாடக முதல்-அமைச்சரின் அறிவிப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. சட்ட விரோதமானதாகும்.
பா.ஜனதா மாநில அரசு ஒரு பக்கம். கர்நாடக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி "நம்ம தண்ணீர் நம்ம உரிமை" என்ற பெயரில் மேகதாது அணை கட்ட வலியுறுத்தி பாதயாத்திரை நடத்தியது மறுபக்கம்.
நம்ம தண்ணீர் நம்ம உரிமை
கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக நலனுக்கு விரோதமாகவே செயல்படுகிறார்கள்.
மேகதாது அணை கட்டியே தீருவோம் என்ற கர்நாடக முதல்-மந்திரியின் அறிவிப்பை காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
அரசியல் ஆதாயத்துக்காக தமிழக மக்கள் நலனை பலி கொடுக்காமல் கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அரசியல் சாசன கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழக அரசு தாமதமின்றி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.