சமூகக்காடுகள் திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டதற்கான செலவுத்தொகை வழங்க வேண்டும்


சமூகக்காடுகள் திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டதற்கான செலவுத்தொகை வழங்க வேண்டும்
x

சமூகக்காடுகள் திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டதற்கான செலவுத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

மதுரை

தமிழக வனத்துறையின் சார்பில் சமூக காடுகள் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் அரசாணை மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கடிதம் ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நட உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து, மதுரை மாவட்டத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதாவது, கடந்த 2019-20 நிதியாண்டில் பெருமளவு மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட சமூகக்காடுகள் அலுவலகம் மூலம் மாவட்டம் முழுவதும் 7,777 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த பணிகளுக்கான ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.14 லட்சத்து 93 ஆயிரத்து 361 நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்து 575 மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டு, மண்டல அளவிலும், கோட்ட வன அளவிலும் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, தற்போது 7,660 உயிர்ச்செடிகள் இருப்பதாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதற்கு செலவான தொகையில் ரூ.6 லட்சத்து 59 ஆயிரம் தற்போதுவரை விடுவிக்கப்படவில்லை. இந்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை அப்போது பணியில் இருந்த வனச்சரக அலுவலர்கள் தங்களது சொந்த பணத்தை ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த பணிகள் முடிந்து 3 வருடங்கள் ஆன பின்னரும் நிலுவைத்தொகை வழங்காமல் இருப்பது வனச்சரக அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட காரணமாக இருந்து வருகிறது. எனவே, இந்த திட்டத்துக்கான நிதியை விரைவில் பெற்று செலவுத்தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறை பணியாளர்கள் வட்டாரத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story