திருமண மண்டபத்தை பயன்படுத்த இந்து முன்னணி கோரிக்கை


திருமண மண்டபத்தை பயன்படுத்த இந்து முன்னணி கோரிக்கை
x
தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமண மண்டபத்தை பயன்படுத்த இந்து முன்னணி கோரிக்கை வைத்துள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு கடந்த 2015-ம் ஆண்டு ராம்கோ நிறுவனத்தின் சேர்மன் ராமசுப்பிரமணியராஜா ரூ.3 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டி தானமாக வழங்கினார். இந்த மண்டபத்தில்தான் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணவிழா மற்றும் பொதுமக்களின் இல்ல திருமண விழாக்கள் நடைபெற்றன. இந்நிலையில் திருமண மண்டபத்தினை அன்னதான மண்டபமாக மாற்றி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ராமேசுவரம் கோவிலில் ரூ.3 கோடி செலவில் திருமண மண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே கட்டிக்கொடுக்கப்பட்ட திருமண மண்டபத்தினை முறையாக பயன்படுத்தாமல் அன்னதான மண்டபமாக பயன்படுத்திவரும் நிலையில் மீண்டும் புதிதாக திருமண மண்டபம் கட்டுவதாக அறிவித்துள்ளது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும்.

மேலும், கோவிலுக்கு நன்கொடையாளர் ஒருவர் என்ன நோக்கத்திற்காக தானமாக கட்டிக்கொடுக்கிறாரோ அதனை கடைப்பிடிக்காமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்திவிட்டு அதற்கு பதிலாக வேறு திருமண மண்டபம் கட்டுவோம் என்பது நன்கொடையாளரை வேதனைப்படுத்தும் செயலாகும்.

இதுதவிர, இனி நன்கொடையாளர்கள் தங்களின் வேண்டுதலின்படியோ, பக்தர்களின் வசதிக்காகவோ வேறு உதவிகள் செய்ய தயங்கும் நிலை ஏற்படும். எனவே, தமிழக அரசு ஏற்கனவே உள்ள திருமண மண்டபத்தினை அதற்கென பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக அரசு சார்பில் அன்னதான மண்டபம் புதிதாக கட்டி கொடுக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story