புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க்கு மின் இணைப்பு
புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்குழாய்க்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தொண்டி,
திருவாடானை யூனியன் கூகுடி ஊராட்சி விசும்பூர் தாதன் வயல் தாத மடத்து ஊருணி அருகே 14-வது நிதி குழு மானியத்தின் கீழ் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்த நிலையில் ஆழ்குழாய்க்கு மின் வசதி வழங்கிட மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. ஆனால் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது கூகுடி ஊராட்சி பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் தண்ணீர் வசதி கிடைக்காமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் செயல்பாட்டிற்கு வந்தால் ஊராட்சி கிராமங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எனவே ஆழ்குழாய் அருகில் அமைக்கப்பட வேண்டிய புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியை விரைந்து முடித்திட வேண்டும் என்றும் ஊராட்சி தலைவர் கூகுடி சரவணன் மின் துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இது குறித்து ஊராட்சி தலைவர் சரவணன் கூறியதாவது:- தற்போது கூகுடி ஊராட்சி முழுவதும் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. குறைந்த அழுத்த மின் வசதியால் இரவு நேரங்களில் மின் விளக்குகள் குறைவான வெளிச்சத்தில் எரிவதாலும் மின்சாதன பொருட்களை சரியான முறையில் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே மின்துறை அதிகாரிகள் கூகுடி ஊராட்சி கிராமங்களுக்கு சீரான முறையில் மின் வினி யோகம் நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.