சிறுபான்மையில்லாத பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்குஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை


சிறுபான்மையில்லாத பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்குஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 15 July 2023 12:45 AM IST (Updated: 15 July 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சிறுபான்மையில்லாத பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை


தமிழகத்தில் சிறுபான்மையில்லாத பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு

மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் செயல்முறைகள், 2012-ன் படி, ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் விவகாரத்தில், 16.11.2012 வரை அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் முறையாக பணி நியமனம் பெற்ற சுமார் 1000 ஆசிரியர்கள் மட்டும் தகுதித்தேர்வு (டி.இ.டி.) நிபந்தனையால் தற்போது வரை பாதிப்புக்குள்ளாகி கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அதே காலகட்டத்தில், அரசுப்பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் 2017 உத்தரவின்படி, தகுதித்தேர்வில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர்.

அத்துடன், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் செயல்முறைகள் 2013 மூலம் தகுதித்தேர்வு நிபந்தனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் மட்டும் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டு தகுதித்தேர்வில் இருந்து விலக்களிக்கப்படும் என்று கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்தார். தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.

விலக்கு அளிக்க வேண்டும்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைமுறைகள் செயல்படுத்தப்படுவதற்கு முன்னரே, பல வருடங்களாக அமலில் உள்ள கல்வித்துறை நடைமுறைகள் மற்றும் அரசின் வழிகாட்டுதல் படி, அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியல், நாளிதழ் விளம்பரம், பள்ளிக்கல்வித்துறை அங்கீகாரம் பெற்ற பள்ளிக்குழுவின் நேர்முகத்தேர்வு, இனச்சுழற்சி ஆகியவற்றின் அடிப்படையில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளிக்கல்வித்துறையின் ஒப்புதலுடன் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.

தகுதித்தேர்வு தேர்ச்சிக்காக மட்டும் பதவி உயர்வு, வளர் ஊதியம், ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பு சம்பளம், பணிப்பதிவேடு, பிரசவ விடுப்பு, தகுதிகாண் பருவம் நிறைவேற்றல், பணிவரன்முறை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் பலர் ஓய்வு பெறும் வயதை அடைந்துள்ளனர். எனவே தமிழக முதல்-அமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு 11 வருடங்களாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு கருணையுடன் தகுதித்தேர்வில் இருந்து விலக்க அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஆசிரியர்கள் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்துக்கு ஆயிரம் புத்தகங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியிடம் வழங்கப்பட்டது.


Next Story