சேதமடைந்த குவிலென்சுகளை சீரமைக்க கோரிக்கை
திருச்சுழி பகுதிகளில் சாலைகளில் உள்ள சேதமடைந்த குவிலென்சுகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி,
திருச்சுழி பகுதிகளில் சாலைகளில் உள்ள சேதமடைந்த குவிலென்சுகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குவிலென்சு
திருச்சுழி பகுதிகளில் உள்ள சாலைகளில் அபாயகரமான வளைவுகள் உள்ள பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க குவிலென்சு அமைக்கப்பட்டது. வளைவுகளில் வாகனங்கள் வருவதை வாகன ஓட்டிகள் பார்த்து செல்வதால் பெரும்பாலான விபத்துகள் தவிர்க்கப்பட்டது. இந்தநிலையில் பெரும்பாலான இடங்களில் குவிலென்சு கண்ணாடி உடைந்தும், தூசி படிந்தும், முலாம் பூச்சு தேய்ந்தும் காணப்படுகிறது. சில இடங்களில் திசை மாறி இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எந்த நோக்கத்திற்காக இந்த லென்சுகள் அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நடவடிக்கை
இரவு நேரங்களில் வாகனங்களில் ஒளிரக்கூடிய விளக்குகள் குவிலென்சில் பிரதிபலிப்பதன் மூலம் எதிர்திசையில் வாகனங்கள் வருவதை தெரிந்து கொண்டு வாகன ஓட்டிகள் கவனமாக இயக்கி விபத்துகளை தவிர்த்து வந்தனர்.
தற்போது குவிலென்சுகள் பயன்பாடு இல்லாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. திருச்சுழி, கல்லூரணி, ஒத்தக்கடை, கா.விலக்கு.ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட குவிலென்சுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. ஆதலால் தேவையற்ற விபத்துகளை தடுக்க திருச்சுழி பகுதிகளில் குவிலென்சுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.