தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை


தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
x

சிவகாசி பொத்துமரத்து ஊருணியில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி பொத்துமரத்து ஊருணியில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொத்துமரத்து ஊருணி

சிவகாசி பஸ் நிலையம் எதிரில் பொத்துமரத்து ஊருணி உள்ளது. கடந்த காலங்களில் அப்பகுதி மக்கள் இங்கிருந்து தண்ணீர் கொண்டு சென்று புழங்கி வந்ததாக கூறப்படுகிறது. கோடைக்காலங்களில் இந்த ஊருணியில் இருந்த தண்ணீரில் குளித்துள்ளனர்.

இந்தநிலையில் காலப்போக்கில் அந்த பகுதியில் சிலர் ஆக்கிரமிப்புகளை தொடர்ந்ததால் ஊருணியின் அளவு நாளடைவில் குறைந்து போனது. பின்னர் ஊருணியில் கழிவுநீர் கலக்க தொடங்கியது. இதனால் ஊருணி பயன் இல்லாமல் போனது. கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கழிநீர் ஓடையாக மாறி இருந்தது.

தூர்வார முடிவு

இந்தநிலையில் சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் இந்த ஊருணியை தூர்வாரி அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைக்க முடிவு செய்தது. அதற்காக ரூ.1 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கியது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் தூர்வாரும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. தூர்வாரும் பணிகளை முடித்துவிட்டு பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய வசதியாக நடைமேடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறியது. ஆனால் 7 மாதம் ஆன நிலையில் 10 சதவீத பணிகள் கூட இன்னும் முடியாத நிலை உள்ளது. பழையப்படி தற்போது பொத்துமரத்து ஊருணியில் கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியை சேர்ந்த சிலர் ஊருணியில் கழிவுகளை கொட்டி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி, ஊருணியை தூர்வாரும் பணியினை உடனே செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.


Next Story