ரெட்டியார்பட்டி பகுதியில் தொற்றுநோயை கட்டுப்படுத்த கோரிக்கை
ரெட்டியார்பட்டி பகுதியில் தொற்றுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இட்டமொழி:
நெல்லை மாவட்ட கலெக்டருக்கு நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி வி.நாராயணன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
பாளையங்கோட்டை யூனியன் ரெட்டியார்பட்டி ஊராட்சி, ரெட்டியார்பட்டி கிராமத்தில் சாத்தான்குளம் செல்லும் சாலையில் இருந்து மேற்கு நோக்கி டக்கரம்மாள்புரம் வரை செல்லும் சாலையில் உள்ள காமராஜர் தெரு அம்மன் கோவில் அருகில் உள்ள கழிவு நீர் ஓடை சேதமடைந்து கழிவு நீர் தேங்கி காணப்படுகிறது. இதில் இருந்து கொசு மூலம் நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதேபோல் ஊரின் மையப்பகுதியான திருவள்ளுவர் தெருவில் தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சுகாதாரமான வாழ்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.