ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்துக்கு வனத்துறை அனுமதி பெற்றுத்தர கோரிக்கை
ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்துக்கு வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற்றுத்தர வேண்டும் வனத்துறை அமைச்சரிடம், தி.மு.க. மாவட்ட செயலாளர் கோரிக்கை மனு கொடுத்தார்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சென்னையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு கடந்த ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் முறையாக அனுமதி வழங்கவில்லை என இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி வந்த பிறகு முதல்-அமைச்சரிடமும், அமைச்சர் துரைமுருகனிடமும் இதுகுறித்து கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து வன அலுவலர்கள், தலைமை வன அலுவலர்கள், மாவட்ட வன அலுவலர்கள், வனத்துறை துணை இயக்குனர்கள் ஆகியோரை பலமுறை தொடர்பு கொண்டு இந்த நடவடிக்கையை துரிதப்படுத்த கேட்டுக் கொண்டேன். எனவே முதல்-அமைச்சரிடம் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு வனக்குழு மற்றும் மத்திய அரசு வனக்குழு அனுமதியை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு இந்த திட்டம் நிறைவேறும் போது அரியபுரம், திப்பணம்பட்டி, ஆவுடையானூர், வெங்காடம்பட்டி, தெற்கு மடத்தூர், பெத்தநாடார்பட்டி, பூலாங்குளம், ஆண்டிப்பட்டி ஆகிய கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி பகுதி ஆகியவற்றைச் சேர்ந்த விவசாயிகள் மிகுந்த அளவில் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கொடுத்த மனுவில், வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலுக்கு திருப்பணிகளை தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும், இந்த கோவிலுக்கு சொந்தமான 3¼ ஏக்கர் நிலம் எந்தவித பயன்பாடும் இல்லாமல் இருப்பதில் வீரகேரளம்புதூர் அரசு மருத்துவமனை கட்டுவதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கொடுத்துள்ள மனுவில், சுரண்டை நகராட்சியில் ஆணையாளர் நியமிக்கப்படவில்லை. பொறியாளரும் நியமிக்கப்படவில்லை. வேறு ஊர்களில் இருந்து இவர்கள் இங்கு வந்து பணியாற்றுகிறார்கள். இதனால் பணிப்பளு அவர்களுக்கு கூடுகிறது. எனவே இங்கு உடனடியாக ஆணையாளரும், பொறியாளரும் நியமிக்கப்பட வேண்டும். இதுதவிர ஆலங்குளம் பேரூராட்சிக்கும் நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். நிகழ்ச்சிகளில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.