ஆராய்ச்சி படிப்பு கட்டணத்தை குறைக்க கோரிக்கை
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று செனட் சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மணிகண்டம், ஜூலை.24-
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று செனட் சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
செனட் சபை கூட்டம்
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் சபை கூட்டம் பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைவேந்தர் செல்வம் தலைமை தாங்கி புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்து அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகிக்கும் ஆராய்ச்சி இயக்குனருக்கு பதிலாக நிரந்தர இயக்குனரை நியமிக்க காலதாமதம் ஆகும் என்பதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை ஆராய்ச்சி இயக்குனர் பொறுப்பில் நியமிக்க வேண்டும்.
பேராசிரியர்கள் தங்களது கல்வி தகுதிக்கு அங்கீகாரம் பெறுவதற்கு தொகை இல்லாமல் இலவசமாக செய்து தர வேண்டும். உண்மைத்தன்மை தரச் சான்றிதழ் பெறுவதற்குரிய கட்டண தொகை குறைக்கப்பட வேண்டும்.
ஆராய்ச்சி படிப்பு கட்டணம்
ஏழை எளிய மாணவர்களின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டணங்களை உடனடியாக குறைத்திட வேண்டும். அரசு கல்லூரிகளில் நடத்த பெரும் பாடப்பிரிவுகளுக்கு அரசு நிரந்தர பணியிடங்களை உருவாக்கி அனுமதி அளித்து இருப்பின் அப்பாடங்களுக்கு நிரந்தர இணைவு வழங்க வேண்டும். பட்டதாரி தொகுதிக்கான சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில் பட்டதாரி தொகுதியில் வெற்றி பெற்ற செனட் உறுப்பினர் மட்டுமே போட்டியிட அனுமதிக்க வேண்டும். மின்னணுவியல் பாடப்பிரிவிற்கு தனியாக வினாத்தாள்கள் தயாரிக்க வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் பல்கலைக்கழக அளவில் இடமாறுதல் பெரும்பட்சத்தில் ஆய்வியல் மைய கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டியுள்ளது. இதனை நீக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அரசுக்கு பரிசீலனை
இந்த கோரிக்கைகளுக்கு துணைவேந்தர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதிலளித்து பேசும்போது, செனட் சபை உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர். கூட்டத்தில் பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தேர்வு நெறியாளர் சீனிவாசராகவன் மற்றும் எம்.செல்வம், மங்களேஸ்வரன், சுகுணலெட்சுமி மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.