சோழர் கால பெரிய ஏரியை சீரமைக்க கோரிக்கை


சோழர் கால பெரிய ஏரியை சீரமைக்க கோரிக்கை
x

சோழர் கால பெரிய ஏரியை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

குன்னம்:

பராமரிப்பில்லை

பெரம்பலூர் மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றான 12 கோடி ஆண்டுகள் தொன்மையான கல்மரம் அமைந்த சாத்தனூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய ஏரி உள்ளது. 85 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த ஏரி தொடர்பான சோழர் காலத்து கல்வெட்டு ஊரில் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஏரி தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

சாத்தனூர் சுற்று வட்டார காடுகளில் இருந்து வரத்து வாய்க்கால்கள் வழியாக வரும் மழைநீர் சாத்தனூர் பெரிய ஏரியில் நிரம்பி, பின்னர் சிறுகன்பூர் ஓடை வழியாக மருதையாற்றில் கலக்கும் வகையில் கட்டமைப்பு உள்ளது.

மண்மேடாக காட்சியளிக்கிறது

சாத்தனூர் பெரிய ஏரி முறையாக ஆழப்படுத்தப்படாத காரணத்தால் மழைக்காலங்களில் விரைவாக நிரம்பி வழிகிறது. இதனால் அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாசன வசதி தண்ணீர் திறக்கப்பட்ட இந்த ஏரியின் மதகுகள், தற்போது எங்கு உள்ளது என்று தெரியாத நிலையில் உள்ளது. மேலும் ஏரி மண் மேடாக காட்சி அளிக்கிறது.

கடந்த 2019, 2020 ஆகிய 2 ஆண்டுகளில் நிதி திரட்டி ஏரியில் ஆங்காங்கே ஆக்கிரமித்திருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றியும், நீர்வழித்தடங்களை ஆழப்படுத்தியும், கரையை பலப்படுத்தும் பணியிலும் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டனர். தற்போது மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

கோரிக்கை

மேலும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மீண்டும் பாசன ஏரியாக மாற்றிட வேண்டும் என்றும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கும் தொடர்ந்து ஊர்ப்பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர்.

எனவே இந்த ஏரியை முறையாக ஆழப்படுத்தியும், கரைகள் இல்லாத பகுதியில் கரைகள் அமைத்தும், மதகுகளை சீர்செய்தும், ஏரியில் ஆங்காங்கே மண் திட்டுகள் அமைத்து பறவையினங்களை கவரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க தேவையான நிதி ஒதுக்கி முறையாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story