நீர்வரத்து கால்வாயை சீரமைக்க கோரிக்கை
சாத்தூர் அருகே நீர்வரத்து கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே நீர்வரத்து கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோல்வார்பட்டி அணை
சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி அணை பகுதியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் மேலமடை கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அணை நீர் வந்து சேர்வதிலும் தடைகளாக கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
கோல்வார்பட்டி அணைக்கு அர்ச்சுனா நதி வழியாக நீர் வந்து சேருகின்றன. இந்த அர்ச்சனா நதி ஆற்றுப்பகுதி முழுவதும் வேலி மரங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு ஆற்றுப்பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது. மேலும் அணைக்கட்டு பகுதியில் உள்ளேயும் கருவேல மரங்களாக முளைத்து அடர்ந்த வனமாக காட்சியளிக்கிறது.
தற்போது அணை பகுதியில் மட்டும் சிறிதளவு தண்ணீர் உள்ளது.
நீர் வரத்து கால்வாய்
இந்த அணையின் சுற்று வட்டார பகுதியில் 5 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் நிறையும் பட்சத்தில் 4,500 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும். இந்த பருவகாலத்தில் நீர்த்தேக்கம் நிறைவதற்கு வேலி மரங்களின் ஆக்கிரமிப்பினை அகற்றி சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அணை நிறைந்து மேலமடை கண்மாய்க்கு நீர்வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
ஆதலால் நீர்வரத்து கால்வாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.