சுரண்டை நகராட்சி 23-வது வார்டில் எரிவாயு தகன மேடை அமைக்க கோரிக்கை
சுரண்டை நகராட்சி 23-வது வார்டில் எரிவாயு தகன மேடை அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
சுரண்டை:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம், சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் கோரிக்கை மனு கொடுத்தார். அதில், சுரண்டை நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 23-வது வார்டு கீழச்சுரண்டை களம் புறம்போக்கு மேல்புறம் எரிவாயு தகன மேடை அமைக்க நகராட்சி தலைவர், கவுன்சிலர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இடம் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் அச்சத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தாத இடம் ஆகும். ஆனால் தற்போது தங்களிடம் இருந்து வரப்பட்ட கடிதம், எரிவாயு தகன மேடை 11-வது வார்டில் அமைக்கும்படி கூறியுள்ளீர்கள். அந்த பகுதியில் 100 மீட்டர் தொலைவில் குடியிருப்புகள், சுமார் 2,000 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள் உள்ளன. எனவே 11-வது வார்டில் எரிவாயு தகன மேடை அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்து, சுரண்டை நகராட்சியால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 23-வது வார்டு ஆற்றுப்பாலம் தென்புறம் மின்மயான தகனமேடை அமைக்க ஆவன செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 11-வது வார்டு பங்களா சுரண்டை பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்க அடிப்படை பணி தொடங்கப்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பழனிநாடார் எம்.எல்.ஏ.விடம், உடனடியாக பங்களாசுரண்டை பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை நிறுத்த வலியுறுத்தி மனு கொடுத்தனர்.