பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் குழு அமைக்க கோரிக்கை


பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் குழு அமைக்க கோரிக்கை
x

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் குழு அமைக்க கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார்குழு அமைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

பாலியல் புகார் விசாரணைக்குழு

அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழை, எளி மாணவர்கள் கல்வியை உறுதிப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அரசு நிர்ணயித்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கட்டண விவரம் தொடர்பாக விரிவான அறிக்கை வெளியிட வேண்டும், அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்க வேண்டும், பள்ளி, கல்லூரியில் பாலியல் புகார் விசாரணைக்குழு மற்றும் புகார் பெட்டி அமைக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். கடந்த ஆண்டு கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.

அமலை செடி

தூத்துக்குடி புறநகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜா தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், பழைய காயல் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உள்ள விவசாயத்துக்கு பயன்பட்டு வரும் தாமிரபரணி வடகால் பாசன பழையகாயல் குளத்தில் உள்ள அமலை செடிகளை அகற்ற வேண்டும், பழைய காயல் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும், சுத்தமான குடிநீர் சீராக வழங்க வேண்டும், தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், பழையகாயல் மெயின் ரோட்டில் குப்பை தொட்டிகள் சரிவர பராமரிக்காததால் திருச்செந்தூர் சாலையில் குப்பைகள் தேங்கி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு உருவாகிறது. ஆகையால் உடனுக்குடன் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பஸ் வசதி

விளாத்திகுளம் தாலுகா வீரபாண்டியபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், கோவில்பட்டியில் இருந்து குளத்தூருக்கு தினமும் 2 நேரங்களில் இயங்கி வந்தது. இந்த பஸ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த பஸ் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு பஸ் இயக்கப்படவில்லை. ஆகையால் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும், இதனை சக்கம்மாள்புரத்தில் இருந்து டி.சுப்பையாபுரம் வழியாக குளத்தூருக்கு இயக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

சுகாதார சீர்கேடு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக இளைஞர் அணி செயலாளர் ஜெசுதாஸ் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ஏரல் தாலுகா குருகாட்டூர் கிராமத்துக்கு கடம்பா குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் குருகாட்டூர், கோட்டூர், குரங்கனி, மஞ்சள் விளை ஆகிய பகுதி விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. அதே போன்று குடிநீருக்கும் இந்த தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கால்வாயில் தென்திருப்பேரை பேரூராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடக்கிறது. அதனை தடுத்து நிறுத்தி மாற்று வழியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


Next Story