தூத்துக்குடி அருகே கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடி அருகே கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
விளாத்திகுளம் தாலுகா மாமுநயினார்புரத்தை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், "விருசம்பட்டி பஞ்சாயத்தில் விருசம்பட்டி, மாமுநயினார்புரம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. இதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு வாரம் வேலை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சமீபகாலமாக எங்களுக்கு முறையாக வேலை வழங்கப்படவில்லை. இரு கிராம மக்களிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் அலுவலர்கள் செயல்படுகின்றனர். ஆகையால் எங்களுக்கு முறையாக வேலை வழங்கவும், இடையூறு ஏற்படுத்தும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளனர்.
கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
தூத்துக்குடி அருகே உள்ள அனந்தமாடன்பச்சேரி கிராம மக்கள் கொடுத்த மனுவில், "எங்கள் ஊரில் உள்ள கண்மாயில் தனியாருக்கு சொந்தமான அனல்மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் எங்கள் கண்மாய் நீரை விவசாயத்துக்கோ, குடிப்பதற்கோ பயன்படுத்த முடியவில்லை. இந்த தண்ணீரை குடிக்கும் ஆடு, மாடுகள் இறந்து விடுகின்றன. அந்த தண்ணீரில் குளித்த மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஆகையால் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மனு கொடுத்தனர். அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மாசு இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டுள்ளோம். தூத்துக்குடி மாசு ஏற்படுவதற்கு வாகன புகை, சாலை தூசு தான் காரணம் என்பதை உணர்ந்துள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் வருவதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டது. இதனால் ஆலை 4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வி, பொருளாதாரம் முன்னேற்றத்திற்கும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும்" என்று கூறி உள்ளனர்.
ஆதார் அட்டையை எரிக்க முயற்சி
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர். இவர் நேற்று காலை குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். இவர் திடீரென ஆதார் அடையாள அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை தீவைத்து எரிக்க முயன்றார். அப்போது அங்கு இருந்த அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுந்தரை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் விசாரணைக்காக சுந்தரை அழைத்து சென்றனர்.
இதுதொடர்பாக அவர் அளித்த மனுவில், "நான் ராஜகோபால்நகர் 1-வது தெருவில் வீடு வாங்கி உள்ளேன். அந்த வீட்டில் பால் காய்ச்சுவதற்கு முன்பு வீட்டை விலைக்கு கொடுத்தவர், வீட்டுக்கு பத்திரம் முடித்து தராமல் சென்று விட்டார். இதுதொடர்பாக பல போராட்டங்கள் நடத்தியும் தீர்வு காணப்படவில்லை. தற்போது அந்த வீட்டுக்கு கூடுதலாக பணம் தருமாறு கேட்கிறார்கள். எனக்கு வேலை எதுவும் இல்லாத நிலையில் என்னால் கூடுதல் பணம் கொடுக்க முடியாது. இதனால் அவர்கள் என்னை மிரட்டுகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.