லாரியில் கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


லாரியில் கடத்தப்பட்ட   12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
திருப்பூர்


மடத்துக்குளம் சோதனை சாவடியில் வாகன சோதனையின்போது லாரியில் கடத்தி வரப்பட்ட 12 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.

லாரியில் ரேஷன் அரிசி கடத்தல்

கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில், ஈரோடு உட்கோட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கி, கார்த்தி மற்றும் போலீசார் மடத்துக்குளத்தில், பழனி-பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள். லாரியின் பின்புறம் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. கடையில் விற்பனையாகும் அரிசியை போன்று புதிய சாக்கு மூட்டையில் அடைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் போலீசார் மூட்டையை பிரித்து சோதனை செய்தபோது அது ரேஷன் அரிசி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

லாரி டிரைவர் கைது

லாரியில் மொத்தம் 12 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது. லாரி டிரைவரிடம் விசாரித்தபோது அவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சசிக்குமார் (வயது 40) என்பது தெரியவந்தது. விசாரணையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சண்முகவேல் என்பவர் ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி பின்னர் மூட்டைகளில் அடைத்து கேரளாவுக்கு அனுப்பியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து 12 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 500 ஆகும். போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்தனர். லாரி உரிமையாளர் சதீஷ்குமார், சண்முகவேல் ஆகியோரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story