சேலத்தில் மாயமான தொழிலாளி பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் பிணமாக மீட்பு
சேலத்தில் மாயமான தொழிலாளி பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
பள்ளிபாளையம்:
சேலம் மாநகராட்சி கருங்கல்பட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது 55). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்த மோகன் திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் பிரேமா புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி தொழிலாளி மோகனை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மோகன் கொண்டலாம்பட்டி பைபாசில் இருந்து ஈரோட்டிற்கு பஸ்சில் ஏறி சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆண் பிணம் கரை ஒதுங்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், சேலத்தில் மாயமான தறித்தொழிலாளி மோகன் என்பது தெரியவந்தது. அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.