ராமியம்பட்டியில் மாயமான 3 சிறுவர்கள் மதுரையில் மீட்பு
அரூர்:
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ராமியம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு விருத்தாசலம் (வயது 13), சக்திவேல் (8) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சிறுவர்களும், பக்கத்து வீட்டை சேர்ந்த குப்புசாமி மகன் மணிகண்டன் (12) ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்து திடீரென மாயமாகினர். அவர்களை கண்டுபிடித்து தரக்கோரி கோபிநாதம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் மாயமான 3 சிறுவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் மதுரையில் சாலையில் சுற்றித்திரிந்த 3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் ராமியம்பட்டியில் மாயமான விருத்தாசலம், சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், தங்கமுத்து ஆகியோர் அங்கு சென்று 3 சிறுவர்களை மீட்டனர். அப்போது பெற்றோர் படிக்க சொன்னதால், சிறுவர்கள் வீட்டில் வைத்திருந்த சீட்டு பணத்தை எடுத்து கொண்டு சென்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.