அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தில் 11 சிறுவர்கள் மீட்பு
11 சிறுவர்கள் மீட்பு
கோபி அருகே அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தில் இருந்து 11 சிறுவர்களை குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
காப்பகத்தில் சோதனை
கோபி அருகே உள்ள பொலவக்காளிபாளையம் பகுதியில் அரசு அனுமதியின்றி தனியார் குழந்தைகள் காப்பகம் நடத்தப்படுவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பொலவக்காளிபாளையம் சென்று சம்பந்தப்பட்ட தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
11 சிறுவர்கள் மீட்பு
சோதனையின்போது அந்த காப்பகத்தில் 18 வயதுக்கு உள்பட்ட 11 சிறுவர்கள் அங்கு தங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த காப்பகம் அரசு அனுமதி இன்றியும், எந்தவித பதிவேடுகள் இல்லாமலும், போதுமான பணியாளர்கள் இல்லாமலும் சிறுவர்களை தங்க வைத்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து கோபி போலீசில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அந்த தனியார் குழந்தைகள் இல்ல நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அந்த தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 11 சிறுவர்களும் மீட்கப்பட்டு ஈரோடு அரசு ஆண்கள் குழந்தைகள் காப்பகத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.