வெள்ளத்தில் சிக்கி விடிய, விடிய பரிதவித்த தம்பதி உள்பட 3 பேர் மீட்பு


பாலக்கோடு அருகே தொல்லகாது ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி விடிய, விடிய பரிதவித்த தம்பதி உள்பட 3 பேரை தீயணைப்பு படையினர் 48 மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே தொல்லகாது ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி விடிய, விடிய பரிதவித்த தம்பதி உள்பட 3 பேரை தீயணைப்பு படையினர் 48 மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.

வெள்ளப்பெருக்கு

பாலக்கோடு அருகே உள்ள தொல்லகாது பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது48). இவரது மனைவி கவுரம்மாள் (45). மகன் குமார் (30) மற்றும் அதேபகுதியை சேர்ந்த மகேஸ்வரி (33) ஆகியோர் நேற்று முன்தினம் கால்நடைகளை மேய்ச்சலுக்காக சின்னாற்றின் குறுக்கே உள்ள தொல்லகாது ஆற்றின் நடுவே உள்ள பகுதிக்கு ஓட்டி சென்றனர். அப்போது திடீரென சின்னாற்றில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கால்நடைகளுடன் சென்ற 4 பேரும் வெள்ளத்தின் நடுவில் சிக்கி தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் வீரர்கள் மற்றும் போலீசார் ஆற்றின் கரையின் இருபுறமும் கயிறு கட்டி குமாரை மீட்டனர். இரவு நேரமாகிவிட்டதால் மற்ற 3 பேரையும் மீட்க முடியவில்லை. இதனால் அவர்கள் 3 பேரும் கால்நடைகளுடன் வெள்ளத்தின் நடுவில் சிக்கி விடிய, விடிய பரிதவித்தனர்.

3 பேரும் மீட்பு

இந்தநிலையில் நேற்று காலை 3 பேரையும் மீட்க தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த மீட்பு பணியை தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் நேரில் பார்வையிட்டார். மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதால் கூடுதலாக தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்றது.

இதையடுத்து 48 மணி நேரத்திற்கு பிறகு சின்னசாமி, இவரது மனைவி கவுரம்மாள் மற்றும் மகேஸ்வரி ஆகிய 3 பேரையும் தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இவர்கள் ஓட்டி சென்ற கால்நடைகள் அங்கேயே உள்ளன. வெள்ளம் குறைந்த பிறகு கால்நடைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.


Next Story