கொத்தடிமையாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீட்பு
ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமையாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீட்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த குப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 39), இவரது மனைவி ரூபா (37). இவர்கள் தங்களது 17 வயது மகள், 13 வயது மகன் ஆகியோருடன் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஜி.டி. நல்லூர் நாசம்பள்ளி எஸ்.சி. காலனியை சேர்ந்த யுகந்தன் என்பவரின் விவசாய நிலத்தில் பல வருடங்களாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர்.
இது குறித்து ஆதிவாசி தோழமைக் கழகம் என்ற தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்டு சித்தூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ரேணுகா சவுத்ரியிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவர் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதாவிடம் அந்த நான்கு பேரையும் ஒப்படைத்தனர்.
பின்னர் 4 பேரும் அணைக்கட்டு தாசில்தார் வேண்டாவிடம் ஆஜர் படுத்தினர். அவர்களுக்கு தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை தாசில்தார் வழங்கி அவரது சொந்த ஊரான குப்பம்பட்டிக்கு அனுப்பி வைத்தார். அப்போது வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.