கள்ளக்காதலனை தேடி வேடசந்தூர் வந்த கேரள இளம்பெண் மீட்பு
இன்ஸ்டாகிராம் மூலம் வலைவிரித்த கள்ளக்காதலனை தேடி வேடசந்தூர் வந்த கேரள இளம்பெண் மீட்கப்பட்டார்.
கேரள இளம்பெண்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பட்டிக்காடு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாயமானார். இதுகுறித்து அந்த இளம்பெண்ணின் கணவர் மெலட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை வைத்து போலீசார் தேடினர்.
அப்போது தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அந்த இளம்பெண் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார் வேடசந்தூருக்கு வந்தனர். அங்கு வேடசந்தூர் போலீசாருடன் இணைந்து கேரள போலீசார் இளம்பெண்ணை தேடினர். அப்போது அங்கு தோழி ஒருவரின் வீட்டில் கேரள இளம்பெண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
கள்ளக்காதலன்
விசாரணையில், இளம்பெண்ணுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் ஆனது. சில மாதங்களில் அவரது கணவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் தனிமையில் இருந்த இளம்பெண் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சமித் (30) என்ற வாலிபர் அறிமுகமானார். அவர், தான் வேடசந்தூரில் உள்ள தனியார் மில்லில் மேலாளராக பணியாற்றுவதாக கூறினார். இதனால் 2 பேரும் பழகி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் சமித், அந்த இளம்பெண்ணிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து 2 பேரும் செல்போன் அழைப்பு மூலம் காதலித்து வந்தனர்.
இதற்கிடையே இளம்பெண், கள்ளக்காதலனை தேடி வேடசந்தூருக்கு வந்துள்ளார். அப்போது சமித்தை அவர் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தவித்த இளம்பெண், அங்குள்ள ஒரு பெண்ணிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அந்த பெண், சமித்தை கண்டுபிடிக்க அவருக்கு உதவுவதாக கூறினார். இதையடுத்து அந்த இளம்பெண் வேடசந்தூரில் உள்ள தனியார் மில்லில் வேலைக்கு சேர்ந்தார். வேலை பார்த்துக்ெகாண்டே சமித்தை தேடினார்.
போலீசார் மீட்டனர்
அப்போது வேறொரு பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சமித் குறித்து விசாரித்தபோது, இளம்பெண்ணுக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. அதாவது சமித் கூறிய அனைத்தும் பொய் என்பது தெரியவந்தது. கேரளாவை சேர்ந்த அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். அதேபோல் அவர் வேடசந்தூரில் உள்ள மில்லில் மேலாளராக பணியாற்றவில்லை. மாறாக கேரளாவில் கொத்தனாராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதனால் மனம் வெறுத்த அந்த இளம்பெண், தனது ஊருக்கும் செல்ல விருப்பம் இன்றி வேதனையுடன் 3 மாதங்களாக வேடசந்தூரிலேயே தங்கி மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறினர். பின்னர் அவரை கேரள போலீசார் மீட்டு சென்றனர். இதற்கிடையே இளம்பெண்ணுக்கு வலைவிரித்து மோசடி செய்ய முயன்றதாக சமித் குறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.