காணாமல் போன தொழிலாளி கிணற்றுக்குள் பிணமாக மீட்பு
நத்தம் அருகே காணாமல் போன தொழிலாளி, கிணற்றுக்குள் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றுக்குள் தொழிலாளி பிணம்
நத்தம் அருகே உள்ள சேத்தூர் ஊராட்சி மொட்டமலைபட்டியை சேர்ந்தவர் பழனி. அவருடைய மகன் ராமன் (வயது 25). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் கூலிவேலை செய்து வந்தார்.
கடந்த 9-ம் தேதி ராமன் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் ராமனை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து கிராம மக்கள் நேற்று அங்கு திரண்டு சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில் ராமனின் உடல் கிணற்றில் மிதந்து கொண்டிருந்தது.
கொலை செய்யப்பட்டாரா?
இதுகுறித்து நத்தம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்தனர்.
பின்னர் அவர்கள், கிணற்றில் இறங்கி அங்கு மிதந்து கொண்டிருந்த ராமனின் உடலை மீட்டனர். அப்போது அவரது உடலோடு சேலையால் கட்டப்பட்டிருந்த பாறாங்கல் ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய முகமும் சிதைந்து இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராமனின் முகத்தில் கல்லைப்போட்டு கொலை செய்த மர்ம நபர்கள், உடலில் கல்லைக்கட்டி கிணற்றுக்குள் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது நெருங்கிய உறவினர்கள் 3 பேரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை
இதற்கிடையே ராமனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபிறகு தான் ராமனின் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் ெதரிவித்தனர். ராமனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு, 3 சகோதரிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.