திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் மீட்பு


திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் மீட்பு
x

திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய வாலிபர் மீட்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் திருக்கோவிலூர் பகுதி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஆற்றில் இறங்கி குளிக்கவோ, செல்பி எடுக்கவோ பொதுமக்கள் யாரும் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று ஒலி பெருக்கி மூலம் வருவாய்த்துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை மகன் மாணிக்கம் (வயது 20) என்பவர் வருவாய்த்துறையினரின் எச்சரிக்கையும் மீறி தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது ஆற்றில் அதிகளவு தண்ணீர் வேகமாக சென்றதால், ஆற்று வெள்ளத்தில் மாணிக்கம் அடித்து செல்லப்பட்டார். பின்னர் அவர் திருக்கோவிலூர் மேம்பாலம் அருகே ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டில் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இதைபார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து திருக்கோவிலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றின் நடுவில் உள்ள மணல்மேட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தை கயிறு மூலமாக மீட்டனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story