தாயாருடன் வீட்டை பூட்டிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் மீட்பு
தூத்துக்குடியில் திடீரென தாயாருடன் வீட்டுக்கதவை பூட்டிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணையும், அவரது தாயாரையும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் திடீரென தாயாருடன் வீட்டுக்கதவை பூட்டிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணையும், அவரது தாயாரையும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
தற்கொலை மிரட்டல்
தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு, லயன்ஸ் டவுண் பகுதியைச் சேர்ந்தவர் நெஸ்டன். இவருடைய மனைவி மனைவி மெடோனா (வயது 40). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தனது தாயார் ரெசிட்டா என்பவருடன் வசித்து வருகிறார். நேற்று காலையில் மெடோனா தனது தாயாருடன் வீட்டை பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சத்தம் போட்டு உள்ளார். இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டு முன்பு குவிந்தனர். அவர்கள் வீட்டுக்கதவை தட்டி திறக்குமாறு கூறினர். ஆனால் மெடோனா கதவை திறக்கவில்லை.
மீட்பு
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் மெடோனா கதவை திறக்க மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி அருணாசலம் தலைமையில் தீயணைப்பு படையினர் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். அவர்களும் சிறிது நேரம் சத்தம் போட்டும் அவர் கதவை திறக்க மறுத்துள்ளார். இதை தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து மெடோனா மற்றும் ரெசிட்டாவை மீட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.