திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தவித்த 17 சிறுவர்-சிறுமிகள் மீட்பு


திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தவித்த 17 சிறுவர்-சிறுமிகள் மீட்பு
x

கடந்த ஓராண்டில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தவித்த 17 சிறுவர்-சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் வழியாக பல்வேறு ஊர்களுக்கு 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் செல்கின்றன. இதனால் தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். அப்போது வீட்டை விட்டு வெளியேறும் சிறுவர்கள், ரெயிலில் தவறி வரும் சிறுமிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

அதன்படி மாமியாரிடம் கோபித்து கொண்டு வந்து திண்டுக்கல்லில் 2 குழந்தைகளுடன் தவித்த புதுச்சோி பெண், 2 வடமாநில சிறுவர்கள், கொரியா செல்ல ஆசைப்பட்டு ரெயிலில் வந்த மதுரை சிறுமிகள் என கடந்த ஓராண்டில் மொத்தம் 18 பேரை திண்டுக்கல்லில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். அந்த வகையில் 14 சிறுவர்கள், 3 சிறுமிகள், 1 பெண் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றனர்.மேலும் ரெயில் பயணிகள் தவறவிட்ட பொருட்களையும் கைப்பற்றி ஒப்படைத்து உள்ளனர்.

அந்த வகையில் பணம், செல்போன், பைகள் என 25 பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு சம்பந்தப்பட்ட நபர்களிடம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்து உள்ளனர். இதுதவிர ரெயில்களின் அபாய சங்கிலியை தேவையின்றி இழுத்து நிறுத்தியவர்கள், உரிமம் இல்லாமல் உணவு பொருட்கள் விற்றவர்கள் என 350 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 300 அபராதம் வசூலித்து உள்ளனர்.


Next Story