கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சமையல்காரர் பிணமாக மீட்பு


கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சமையல்காரர் பிணமாக மீட்பு
x

செண்பகராமன்புதூர் அருகே கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சமையல்காரர் பிணமாக மீட்கப்பட்டார்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

செண்பகராமன்புதூர் அருகே கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சமையல்காரர் பிணமாக மீட்கப்பட்டார்.

சமையல்காரர்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள படுக்கபத்து கீழத்தெருவை சேர்ந்தவர் சித்திரைபாண்டி (வயது 52), சமையல்காரர். இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த இசக்கி (37). இவர் சொந்தமாக லாரிகள் வைத்து ஜல்லி, மணல் ஏற்றிச் செல்லும் தொழில் செய்து வருகிறார். இசக்கியின் லாரி சீதப்பால் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சீதப்பாலில் உள்ள லாரிகளை பார்ப்பதற்காக இசக்கி, சித்திரைபாண்டி மற்றும் வீரபாண்டியன் ஆகிய 3 பேரும் வந்தனர். பின்னர், அவர்கள் 3 பேரும் அவ்வையார் அம்மன் கோவில் அருகே செல்லும் தோவாளை கால்வாயில் குளிக்க சென்றனர்.

தண்ணீரில் மூழ்கினார்

முதலில் சித்திரை பாண்டி கால்வாயிக்குள் இறங்கியுள்ளார். கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென சித்திரைபாண்டி நண்பர்கள் கண்முன்னே தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். இதைபார்த்த இருவரும் கூச்சலிட்டனர்.

பின்னர், இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி முகம்மது சலீம் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து கால்வாய்க்குள் இறங்கி தேடினர். ஆனாலும், சித்திரைபாண்டி கிடைக்கவில்லை. இரவானதும் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிணமாக மீட்பு

இந்தநிலையில் சித்திரைபாண்டி கால்வாயில் மூழ்கிய செய்தி அறிந்து அவருடைய உறவினர்கள் அங்கு வந்தனர். பின்னர், நேற்று காலையில் மீண்டும் சித்திரைபாண்டியை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, அவர் கால்வாயில் மூழ்கிய பகுதியில் இருந்து 100 அடி தூரத்தில் தண்ணீருக்கு அடியில் செடியில் சிக்கியிருந்த அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, அங்கு நின்ற அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கால்வாயில் மூழ்கி இறந்த சித்திரைபாண்டிக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

கால்வாயில் குளிக்கச் சென்றபோது சமையல்காரர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story