கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
குலசேகரம்:
குலசேகரம் அருகே உள்ள செறுதிக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் பேபி (வயது 75). இவருடைய கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து பேபி தனது இளைய மகனின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த மூதாட்டி பேபியை காணவில்லை. இதையடுத்து மகன் வீட்டின் வெளிப்பகுதியில் அவரைத் தேடினார். அப்போது வீட்டின் முற்றத்தில் உள்ள கிணற்றில் இருந்து சத்தம் வந்ததை கேட்டு அங்கு சென்று பார்த்தார். அங்கு பேபி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் வலையை கட்டி இறக்கி மூதாட்டியை மீட்டனர். அவருக்கு காயங்கள் இருந்ததால் குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
காலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்த மூதாட்டி நிலை தடுமாறி தவறி கிணற்றில் விழுந்ததாக தெரிகிறது. இதுகுறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.