சின்னமனூரில் முல்லைப்பெரியாற்றில் அடித்துச்செல்லப்பட்ட வியாபாரி பிணமாக மீட்பு
சின்னமனூரில் முல்லைப்பெரியாற்றில் அடித்துச்செல்லப்பட்ட வியாபாரி பிணமாக மீட்கப்பட்டார்.
சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 50). அரிசி வியாபாரி. கடந்த 22-ந்தேதி இவர், முல்லைப்பெரியாற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் அதிகமாக சென்றதால் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதை பாா்த்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் சின்னமனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் பாஸ்கரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடந்த 2 நாட்களாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் 3-வது நாளாக இன்று பாஸ்கரனை தேடும் பணி நடைபெற்றது.
அப்போது குச்சனூரில் உள்ள முல்லைப்பெரியாறு தடுப்பணை பகுதியில் பாஸ்கரன் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர். பின்னர் பாஸ்கரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.