மாயமான விவசாயி பிணமாக மீட்பு
கடலாடி அருேக மாயமான விவசாயி கண்மாய் பகுதியில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
சாயல்குடி,
கடலாடி அருகே கீழச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்வாகனம் (வயது 45). விவசாயி. இவர் பனை மட்டைகளை மொத்தமாக எடுத்து வெளியூர்களுக்கு அனுப்பும் வேலையை செய்து வந்தார். கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்து சென்ற அவர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கீழச்செல்வனூர் போலீஸ் நிலையத்தில் வழக்குபதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவரது செல்போன் சிக்னல் வைத்து போலீசார் தேடியதில் சிக்கல் அருகே ஆண்டிச்சிகுளம் கண்மாய் மேற்கு பகுதியில் அழுகிய நிலையில் அவரது உடல் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடலாடி இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி கீழச்செல்வனூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி ஆகியோர் விரைந்து வந்து விசாரித்ததில் இறந்தது மயில்வாகனம் என்பது உறுதி செய்யப்பட்டு அவரது உடலை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழச்செல்வனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்