படகை மீட்க சென்றபோது கடலில் தத்தளித்த 7 பேர் மீட்பு


படகை மீட்க சென்றபோது கடலில் தத்தளித்த 7 பேர் மீட்பு
x

கடியப்பட்டணத்தில் நேற்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் அலையில் இழுத்து செல்லப்பட்ட படகை மீட்க சென்றபோது கடலில் தத்தளித்த 7 பேர் மீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

கடியப்பட்டணத்தில் நேற்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் அலையில் இழுத்து செல்லப்பட்ட படகை மீட்க சென்றபோது கடலில் தத்தளித்த 7 பேர் மீட்கப்பட்டனர்.

தொடர் கடல் சீற்றம்

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டு வருகிறது. தமிழக கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் இந்திய கடல் தகவல் சேவை மையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து குமரி மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி உபகரணங்களை கடற்கரை மணற்பரப்பில் நிறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் கடியபட்டணத்தில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. கரையில் நிறுத்தியிருந்த சகாயகுமார் என்பவரின் பைபர் படகை கடல் அலை இழுத்து சென்றது. இதை பார்த்த சகாயகுமார் மற்றும் விஜயன், மைக்கேல் ஆகியோர் கடலில் குதித்து படகை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் படகு கடலில் மூழ்கியது.

7 மீனவர்கள் தத்தளிப்பு

தொடர்ந்து அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் 3 பேரும் கரை சேர முடியாமல் தத்தளித்தனர். இதை பார்த்த சக மீனவர்கள் 2 படகுகளில் அவர்களை மீட்க விரைந்து சென்றனர். அவற்றில் ஒரு படகில் 3 பேரும் மற்றொரு படகில் 4 பேரும் இருந்தனர். அந்த பகுதியில் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் மீனவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

மீட்பு பணியில் ஈடுபட்ட ஒரு படகு அலையில் இழுத்து செல்லப்பட்டு முட்டம் துறைமுகத்தில் கரை ஒதுங்கியது. அதில் இருந்த 3 பேரும் கரை சேர்ந்தனர்.

மற்றொரு படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்த 3 பேரையும் மீட்டுக்கொண்டு கரை திரும்ப முயன்றனர். கரையை நெருங்கி வந்த போது அந்த படகு அலையில் சிக்கி கவிழ்ந்தது. அதில் இருந்த 7 மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டு தத்தளித்தனர்.

கயிறு மூலம் மீட்டனர்

அந்த மீனவர்களை கரையில் நின்ற சக மீனவர்கள் கயிறு மூலம் இழுத்து மீட்டு கரை சேர்த்தனர்.

இதற்கிைடயே அலையில் சிக்கி கவிழ்ந்த படகு தூண்டில் வளைவு மீது தூக்கி வீசப்பட்டது. இதில் என்ஜின், வலை கடலில் மூழ்கியதுடன் படகு பெரும் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து மீனவர்கள் சகாயகுமார், பெபின் ஆகியோர் குளச்சல் மரைன் போலீசில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னமுட்டம்

கன்னியாகுமரி, சின்னமுட்டம் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இந்தநிலையில் நேற்று கடல் சீற்றம் சற்று தணிந்தது. இதையடுத்து விசைப்படகு, கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதுபோல் குளச்சல் பகுதியிலும் நேற்று கடல் சீற்றம் தணிந்தது. இதனையடுத்து பெரும்பாலான மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். குளச்சல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.


Next Story