நான் முதல்வன் திட்டம் குறித்து கலெக்டர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நான் முதல்வன் திட்டம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட கலெக்டர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர்.
நான் முதல்வன் திட்டம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட கலெக்டர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர்.
நான் முதல்வன் திட்டம்
சிவகங்கை மாவட்டம், அரசனூரில் உள்ள பாண்டியன் சரஸ்வதி யாதவா பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் மாணவர்களிடம் கலந்துரையாடினார்கள்.
நிகழ்ச்சியில், கலெக்டர் பேசியதாவது:- பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, "நான் முதல்வன்" என்ற திட்டத்தினை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இத்திட்டம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைக்கல்வி மற்றும் உயா்நிலைக்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு அனுபவரீதியாக, இணையதளம் வாயிலாக கற்றல் திறன்களும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
4,257 மாணவர்கள்
"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பங்களுக்கு தேவையான திறன்களை பெறுவதற்கு, அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே, தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கு வழிகாட்டியாக இத்திட்டம் அமைந்துள்ளது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த திறன் சலுகைகள் பற்றிய தொடர்புடைய தகவல்களை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 9 பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளை சார்ந்த சுமார் 4,257 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தனித்திறன்கள்
18 வகையான படிப்புகளுக்கான தொழில்நுட்ப பயிற்சிகள் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை முறையாக மாணவர்கள் பயன்படுத்தி தங்களது தனித்திறன்களை வெளிக்கொணர்வதற்கும், தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளவும் வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், பாண்டியன், சரஸ்வதி யாதவா பொறியியல் கல்லூரி முதல்வர் ராஜா, திறன் மேம்பாடு அலுவலர் சுதர்சனம் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.