வளர்ச்சி பணிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு
திருவாடானை யூனியனில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொண்டி,
திருவாடானை யூனியனில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் சாலை பணிகள், துணை சுகாதார நிலைய கட்டுமான பணி, கூடுதல் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் திருவாடானை முதல் நகரிகாத்தான் வழியாக அடுத்தகுடி, மங்கலக்குடி தேவகோட்டைக்கு புதிய பஸ் வசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பொதுமக்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் திருவாடானை தொகுதியில் வளர்ச்சி பணிகளை அதிகளவில் செயல்படுத்திட வேண்டும் என கூறியுள்ளார். அதனால்தான் நான் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்துள்ளேன். இனி இந்த தொகுதிக்கு அடிக்கடி வந்து வளர்ச்சி பணிகள் அதிகளவில் நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
இனி வரும் காலங்களில் பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். இப்பகுதியில் உலக வங்கி நிதிகளை பெற்று பாசன வசதிகளுக்காக கால்வாய்கள் சீரமைக்கப்படும். வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவாடானை தொகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தொண்டி பேரூராட்சியுடன் நம்புதாளை ஊராட்சியை இணைப்பதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
திருவாடானை யூனியனில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்கவும், புதிய பஸ்கள்மற்றும் புதிய வழித்தடங்களில் பஸ் வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க புதிய குடிநீர் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின் போது கலெக்டர் விஷ்ணு சந்திரன், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் செங்கமடை சரவணன், திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலம்பாடி கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் கல்யாண சுந்தரம், பிரகலாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் சுமதி முத்துராக்கு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பாண்டுகுடி சிங்கத்துரை, நம்புதாளை பாண்டிச்செல்வி ஆறுமுகம், நகரிகாத்தான் பவுலின்மேரி அருள்சாமி, திருவாடானை இலக்கியா ராமு, தி.மு.க. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆதியூர் பிரபாகரன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கொட்டாங்குடி மோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.