தனியார் மயத்தால் இட ஒதுக்கீடு இல்லாமல் போகும்
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயத்தால் இட ஒதுக்கீடு இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று தர்மபுரியில் நடந்த மக்கள் கோரிக்கை மாநாட்டில் கே. பாலகிருஷ்ணன் பேசினார்.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயத்தால் இட ஒதுக்கீடு இல்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று தர்மபுரியில் நடந்த மக்கள் கோரிக்கை மாநாட்டில் கே. பாலகிருஷ்ணன் பேசினார்.
விலைவாசி உயர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு தர்மபுரியில் நடந்தது. மாநாட்டிற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜோதிபாசு வரவேற்றார். மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநில குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், டில்லிபாபு, நிர்வாகிகள் இளம்பரிதி, மல்லையன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரா கடனில் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான அளவிற்கு தள்ளுபடி வழங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் செலுத்திய வரிப்பணத்தில் இருந்துதான் இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. மறுபக்கம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிக்கிறது. கடும் விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
போராடுவோம்
பழங்குடியின பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக்கி உள்ள பா.ஜனதா அரசு 2006- வன உரிமை சட்டத்தை நீர்த்து போக செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயத்தால் இட ஒதுக்கீடு இல்லாமல் போகும் நிலை ஏற்படும். மக்களின் நலனை பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை எதிர்த்து அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குரல் எழுப்புவது இல்லை. மக்களை கேள்வி கேட்பவர்களாக மாற்றத் தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.