குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது
மன்னார்குடியில் 2 நாட்களாக பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
மன்னார்குடி:
மன்னார்குடியில் 2 நாட்களாக பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. மேலும் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
பாமணி ஆறு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் வடகரையில் காட்டு நாயக்கன் தெரு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் வசித்து வரும் பகுதி அருகில் பாமணி ஆறு செல்கிறது.
மழை நீர் வடிய ஏதுவாக சிறிய ஓடை ஒன்று இப்பகுதி வழியாக பாமணி ஆற்றில் சென்று கலக்கிறது. ஆனால் இந்த ஓடை பல ஆண்டுகளாக தூர்வாராததால் புதர்மண்டி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் காட்டுநாயக்கன் தெருவில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
2 நாட்களாக பலத்த மழை
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மன்னார்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் காட்டுநாயக்கன் தெருவில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.பாமணி ஆற்றுடன் கலக்கும் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் வடிய வழியின்றி வீடுகளை சூழ்ந்துள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கால்வாய் அடைப்பை சரி செய்து மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுவர் இடிந்து விழுந்தது
இந்த மழையால் மன்னார்குடி ருக்குமணி குளம் மேல் கரையில் வசித்து வரும் வசிப்பவர் விஜய் (வயது 45) என்பவரின் வீட்டு சுவர் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த தகவல் அறிந்த மன்னார்குடி நகர சபை தலைவர் மன்னை.சோழராஜன் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விஜய் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது துணைத்தலைவர் கைலாசம் மற்றும் பலர் உடனிருந்தனர்.