கோவிலை அகற்றி சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
கோவிலை அகற்றி சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சித்திரக்குடி கிராமத்திலிருந்து பொந்தம்புளி கிராமத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு சாலைகள் உள்ளது. இந்த நிலையில் பஸ், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லக்கூடிய அளவில் மாற்றுச்சாலை அமைக்க பொந்தம்புளி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சித்திரங்குடி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான அம்மன் கோவில், ஆலமரம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்டவற்றை இடித்துவிட்டு அந்த வழியாக சாலை அமைக்க வருவாய் துறையினர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு சித்திரங்குடி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்த நிலையில் பழமையான அம்மன் கோவில், ஆலமரம், மேல்நிலை குடிநீர் தொட்டி ஆகியவற்றை அகற்றிவிட்டு சாலை அமைக்கும் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொந்தம்புளி கிராமத்தில் இருந்து இரண்டு மாற்று வழிகள் உள்ளதாகவும், அந்த வழியாக சாலை அமைத்தால் தங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கோவிலை இடிக்கும் நோக்கத்தோடு செயல்படுவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் மாற்று வழியில் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.