மின்தகன மேடை அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு
களக்காட்டில் மின்தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
களக்காடு:
களக்காடு நகராட்சி சார்பில் மூனாற்று பிரிவில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.45 கோடி செலவில் மின் தகன மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அங்கு மாசான சுவாமி கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் மின் தகன மேடை அமைக்கக்கூடாது என்று கக்கன்நகர், புதுத்தெரு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மின் தகன மேடை அமைப்பதற்கான முதல்கட்ட பணியாக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது.
இதையறிந்த கக்கன்நகர், புதுத்தெரு கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணிகளை நிறுத்தும்படி கூறி வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ேகாவில், குடியிருப்புகள் அருகே மின் தகன மேடை அமைக்கக்கூடாது என்றும், இதனால் கிராம மக்கள் ஆறு மற்றும் விளைநிலங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்படும் என்றும் கூறினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதே நேரத்தில் அங்கு தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மின் தகன மேடை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு, தோண்டப்பட்ட குழிகளும் மூடப்பட்டன. அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.