ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல்
சாத்தான்குளம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பெதுமக்கள் சாலைமறியில் ஈடுபட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு
சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சை நகரத்தில் நேற்று காலையில் சாலைஓர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தனர்.
சாலைமறியல்
இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மறுத்த பொதுமக்கள் சாத்தான்குளத்தில் இருந்து திசையன்விளை செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊராட்சி மன்ற குப்பை வண்டி, கற்களை சாலையில் மையப்பகுதியில் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படும் அப்பகுதியை சேர்ந்த நபரை பொதுமக்கள் தாக்க முயன்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கோரிக்கை மனு
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் தாசில்தார் மற்றும் போலீஸ் நிலையம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கைவிடுமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.