தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்


தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு:  கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x

விழுப்புரத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

கருத்துக்கேட்பு கூட்டம்

விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம், எல்லீஸ்சத்திரம், பிடாகம் ஆகிய பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் சுமார் 28 ஏக்கரில் மணல் குவாரி அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஏனாதிமங்கலம், மரகதபுரம், எல்லீஸ்சத்திரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம், தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது பெரும்பாலான பொதுமக்கள் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.

வாக்குவாதம்

அந்த சமயத்தில் அதிகாரிகள் குறுக்கிட்டு பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விவசாயிகளின் கருத்தை முழுமையாக பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது மணல் குவாரி அமைப்பதற்கு ஆதரவாக பேசிய தி.மு.க.வினருடன், விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

7-ந் தேதி வரை...

அதனை தொடர்ந்து கலெக்டர் மோகன் கூறுகையில், தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களை பதிவு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.மேலும் அனைவரும் தங்களது கருத்துக்களை வருகிற 7-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என்றார்.

பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கூறுகையில், சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கையில் பல தகவல்கள் தவறாக கூறப்பட்டுள்ளது. மணல் குவாரி அமைக்கவுள்ள இடத்திற்கு அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் தடுப்பணை, பாலம் ஆகியவை உள்ளது மறைக்கப்பட்டுள்ளது.எனவே தமிழக அரசு வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும் என்றார். இதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story