கரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை-செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை-செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

கரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவது என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி சிறப்புரை ஆற்றினார். இதில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டதற்கும், சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி உருவ சிலையை அமைத்து திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.

கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி கரூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் இடங்களில் அவரது உருவப்படத்தினை அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்துவது. கரூர் மாவட்டத்தில் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், வார்டு, கிளை கழகத்தின் சார்பில் கொடியேற்றி இனிப்பு வழங்குதல், ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்குதல், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாணவர்களுக்கு பேச்சு போட்டி என பிறந்தநாளை ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடுவது.

முதல்-அமைச்சரின் செயல்பாடுகளையும், சாதனை திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் தொகுதிகள் வாரியாக திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் மற்றும் கரூர் மாநகராட்சி 48 வார்டுகளிலும், 157 ஊராட்சிகளிலும், 3 நகராட்சிகளில் 9 இடங்களிலும், 8 பேரூராட்சிகளிலும் என மொத்தம் 222 இடங்களில் தெருமுனை கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story