மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்


மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்
x

இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். சக மனிதர்களைப்போன்று அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அரியலூர்

21 வகையானவர்கள்

கை, கால்கள் செயலிழப்பு, முடக்கம், பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் குறைபாடு, மனநலம், தொழுநோய் என மாற்றுத்திறனாளிகள் 7 வகையாக பிரிக்கப்பட்டு இருந்தனர். 2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர், நரம்பியல் நோய், ரத்தசோகை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டனர். தற்போது மாற்றுத்திறனாளிகள் 21 வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

உடலளவில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும் மனதளவில் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களை மதித்திடுவோம்.

அரசு திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தும்விதமாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 11 ஆயிரத்து 323 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த வாரியம் மூலம் கல்வி, திருமணம், மூக்குக்கண்ணாடி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங் உயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு, குறுந்தொழில் தொடங்க ரூ.25 ஆயிரம் நிதி உதவி, மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை, ரூ.1,000 உதவித்தொகை, மாநகர பஸ்களில் இலவச பயணம், தொலைத்தூர பஸ்களின் பயண டிக்கெட்டில் 75 சதவீதம் தள்ளுபடி என தமிழக அரசு தாராளமனதுடன் சலுகைகளை வாரி வழங்குகிறது.

அதேப்போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உதவி திட்டம், தீனதயாள் மறுவாழ்வு திட்டம், தேசிய கல்வி உதவித்தொகை என மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் தங்கள் வாழ்வில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-

அரசின் உதவிகள் கிடைக்கவில்லை

அரியலூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமி:- அரியலூர் தாலுகா அலுவலகம் அருகே மனு எழுதி பிழைப்பு நடத்தி வருகிறேன். எனக்கு உடலில் 75 சதவீதம் ஊனம் என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இதுவரை ரூ.ஆயிரம் மட்டுமே தனக்கு உதவி தொகையாக கிடைக்கிறது. நான் பிளஸ்-2 வரை படித்துள்ளேன். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு சான்றிதழ், கணினி சான்றிதழ் வைத்துள்ளேன். இதுவரை தனக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் இருக்க இடம் வேண்டி வீட்டுமனை விண்ணப்பம் சுமார் 100 முறைக்கு மேல் மாவட்ட கலெக்டர்களிடம் அளித்துள்ளேன். இருந்தபோதும் தனக்கு எவ்வித வேலைவாய்ப்பும் அளிக்கப்படாததால் வாழ்வாதாரம் இன்றி தெருவில் அமர்ந்து மனு எழுத்தி பிழைப்பு நடத்தி வருகிறேன். அரசு, மாவட்ட நிர்வாகம் தனக்கு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும்.

உள் ஒதுக்கீடாக மாற்றி...

அரியலூர் மாவட்டம், கோடங்குடி கிராமத்தை சேர்ந்த அபிநயா:- மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு மற்றும் கல்வி முடித்து வேலைக்கு காத்திருக்கும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வேலை வாய்ப்பிலும் அனைவருக்கும் பொதுவான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி பொதுவான இட ஒதுக்கீட்டுக்கு பதிலாக இன, ஜாதி ரீதியான ஒவ்வொரு ஒதுக்கீட்டிலும் உள் ஒதுக்கீடாக மாற்றி வழங்கப்பட வேண்டும். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு எல்லோருக்கும் உள்ளதுபோல் பொதுவான கல்வி வாய்ப்புகளே உள்ளது. அதனை மாற்றி மாணவ-மாணவிகளின் தனித்திறமையை கண்டறிந்து அவர்களுக்கான பிரத்தியேகமான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். வேலைவாய்ப்பு மட்டுமல்லாது சுயதொழில் தொடங்க விரும்பும் மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு அவர்களது திறமைக்கும், தேவைக்கும் ஏற்றவாறு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கி அவர்களை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும்.

இலவச வீட்டு மனை

தா.பழூர் சிந்தாமணியை சேர்ந்த குணசேகரன்:- மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக மாற்றிய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். தகுதியான ஏழை மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு வழங்கும் 3 சென்ட் இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். பஸ் கட்டண சலுகையை அரசு மாற்றுத்திறனாளிக்கு வழங்கினாலும், அவர்களுக்கான மரியாதையையும், இட வசதியையும் பஸ் கண்டக்டர் முகம் சுழிக்காது ஏற்பாடு செய்து தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்நாள் உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story