ஊனம் என்பது உடலில் இல்லை; மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்


தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊனம் என்பது உடலில் இல்லை, மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்

திண்டுக்கல்

இன்று

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.

சக மனிதர்களைப் போன்று அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

21 வகையானவர்கள்

கை, கால்கள் செயலிழப்பு, முடக்கம், பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் குறைபாடு, மனநலம், தொழுநோய் என மாற்றுத்திறனாளிகள் 7 வகையாக பிரிக்கப்பட்டு இருந்தனர்.

2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர், நரம்பியல் நோய், ரத்தசோகை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.

தற்போது மாற்றுத்திறனாளிகள் 21 வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

உடலளவில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும் மனதளவில் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களை மதித்திடுவோம்.

அரசு திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தும்விதமாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 11 ஆயிரத்து 323 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர்.

அவர்களுக்கு இந்த வாரியம் மூலம் கல்வி, திருமணம், மூக்குக் கண்ணாடி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங் உயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு, குறுந்தொழில் தொடங்க ரூ.25 ஆயிரம் நிதி உதவி, மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை, ரூ.1,000 உதவித்தொகை, மாநகர பஸ்களில் இலவச பயணம், தொலைத்தூர பஸ்களின் பயண டிக்கெட்டில் 75 சதவீதம் தள்ளுபடி என தமிழக அரசு தாராளமனதுடன் சலுகைகளை வாரி வழங்குகிறது.

அதேப்போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உதவி திட்டம், தீனதயாள் மறுவாழ்வு திட்டம், தேசிய கல்வி உதவித்தொகை என மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் தங்கள் வாழ்வில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சி குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-

4 சதவீத வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட தலைவி ஜெயந்தி:-

மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால், செயற்கை கை, கண்ணாடி உள்ளிட்ட உபகரணங்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களில் 4 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். தனியார் துறையில் 5 சதவீத வேலைவாய்ப்பை அமல்படுத்த வேண்டும். மாநில அரசு உதவித்தொகையை ரூ.500 உயர்த்தி வழங்குவதாக கூறியதை நிறைவேற்ற வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டரின் முயற்சியால் பலருக்கு சுயதொழில் கடன் கிடைத்தது. ஆனால் பான்கார்டு கேட்பதால் பலர் கடன் கேட்கவே வருவது இல்லை. சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க வேண்டும். முகாம்களில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு சிலநேரம் உரிய பதில் கூட கிடைப்பதில்லை. அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம், தனியாக கழிப்பறை வசதி கூட இல்லாத நிலை இன்னும் நீடிக்கிறது. மாற்றுத்திறனாளிகள் தினத்தில் பிரதமரும், முதல்-அமைச்சரும் ஏதாவது அறிவிப்பார்களா? என்று எதிர்பார்க்கிறோம்.

சுயதொழில் செய்ய கடன்

துரையப்பன் (சின்னாளப்பட்டி):- நான் எம்.ஏ., எம்.பில் படித்து இருக்கிறேன். அரசு, தனியார் வேலைகளுக்கு முயற்சி செய்து வருகிறேன். எந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் ஒரு கடை வைத்து தொழில் செய்யலாம் என்று கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தேன். ஆனால் கடனுக்கு 2 பேரின் சிபாரிசு வேண்டும் என்று கூறிவிட்டனர். அரசு வழங்கும் உதவித்தொகை மட்டும் கிடைக்கிறது. வங்கி கடன் கிடைத்தால் கடை வைத்து தொழில் செய்வேன்.

முத்துகுமார் (அய்யம்பாளையம்):- நான் கடன் பெற்று ஆவின் பாலகம் நடத்தி வருகிறேன். அரசின் திட்டங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு சில அதிகாரிகளால் திட்டங்கள் அனைவருக்கும் கிடைப்பதில்லை. மாற்றுத்திறனாளிகளில் பலர் படித்து வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் செய்வதற்கு கடன் வழங்க வேண்டும். அதேபோல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுவதற்கு டாக்டர் அப்துல்கலாம் பெயரில் அமைப்பு தொடங்கி உதவி வருகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியருக்கு படித்தும் வேலை கிடைக்காததால்

சாலை ஓரத்தில் பாட்டு பாடும் பார்வையற்ற பெண்

திண்டுக்கல் அருகே கண்ணார்பட்டி பிரிவு பகுதியில் இந்திராநகர் பார்வையற்றோர் குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வரும் தம்பதி ரமேஷ் (வயது 42)-மேனகா (37). சாலை ஓரத்தில் மைக்கில் பாட்டு பாடி, அதற்காக மக்கள் கொடுக்கும் சொற்ப பணத்தை வைத்து குடும்பம் நடத்துகின்றனர். திண்டுக்கல் பெரியார் சிலை அருகில், ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.... என்ற நம்பிக்கை தரும் மேனகா உச்ச குரலில் பாடலை பாடி கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ரமேஷ் அமர்ந்து இருந்தார்.

இவர்களில் மேனகா கூறுகையில், நான் ஆசிரியை ஆகும் கனவில் தமிழில் பி.ஏ., பி.எட் படித்தேன். நான் படித்து 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எனக்கு வேலை கிடைக்கவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வும் எழுதி வருகிறேன். ஆசிரியர் வேலை மட்டுமின்றி இதர வேலைகளும் கிடைக்கவில்லை. அரசு வழங்கும் ரூ.1,000 உதவித்தொகை எனக்கு மட்டுமே கிடைக்கிறது. எனது கணவருக்கு கிடைக்கவில்லை. அடையாள அட்டைக்கு முகாம் நடப்பதாக கூறுகின்றனர். எப்படி செல்வது என்றே தெரியவில்லை.

எனக்கு கிடைக்கும் உதவித்தொகையை கொண்டு 2 பேரும் வாழ்வது பெரும் சிரமமாக இருக்கிறது. இதனால் சாலை ஓரத்தில் நின்று பாட்டு பாடுகிறேன். அதை கேட்டு மக்கள் கொடுக்கும் காசை வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம். உழைத்து வாழ வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. இந்த தொழில் செய்வதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. எனினும் வேலை வழியில்லாததால் செய்து வருகிறோம். ஆசிரியர் வேலை கிடைக்கும் வரை வேறு வேலை கிடைத்தால் அதை செய்து கவுரவமாக வாழ விரும்புகிறோம். இதற்கு அரசு வழிகாட்ட வேண்டும், என வேதனை தரும் குரலில் கூறினார்.

40 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டை

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் கூறும்போது, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 40 ஆயிரத்து 965 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. 7 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் பாதுகாவலர்களுக்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சக்கர நாற்காலிகள், ஸ்கூட்டர் உள்பட ரூ.18 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் கலெக்டர், ஆர்.டி.ஓ. ஆகியோர் தலைமையில் தொடர்ச்சியாக முகாம்கள் நடத்தப்படுகின்றன. தற்போது ஊராட்சி ஒன்றிய அளவில் முகாம்கள் நடக்கின்றன. இதில் மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.


Next Story