சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல வெளியூர் வாகனங்களுக்கு கட்டுப்பாடு


சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல வெளியூர் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
x

ஊட்டியில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல வெளியூர் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல வெளியூர் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஊட்டி சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளோ, தொழில்துறை நிறுவனங்களோ இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகளை நம்பி வாகன ஓட்டுனர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோம். சமவெளி பகுதியில் இருந்து வரும் தனியார் கால்டாக்சிகள் சுற்றுலா பயணிகளை சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்வதால், இங்குள்ள சுற்றுலா வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்

இதை தடுக்க வலியுறுத்தி கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்துள்ளோம். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆலோசனையின்படி போலீஸ் சூப்பிரண்டு, சப்-கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, தனியார் கால்டாக்சி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் கோவையில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் வாகனங்கள் அவர்களை இறக்கிவிட்ட பிறகு, இங்கிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது என்றும், கண்டிப்பாக அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை தனியார் கால்டாக்சி நிறுவனத்தினர் சரியாக பின்பற்றுவது இல்லை. எனவே இந்த உத்தரவை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு இதில் கூறப்பட்டு உள்ளது.

உதவித்தொகை

கூட்டத்தில் மொத்தம் 98 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடும் ஊனமுற்றோர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 20 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான ஆணையை கலெக்டர் அம்ரித் வழங்கினார். இதேபோல் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story