பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்


பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை மீண்டும் தொடக்கம்
x

பழனி முருகன் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கு பிறகு ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கியது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்கு பிறகு ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கியது.

ரோப்கார் சேவை

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலைக்கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளது. இவை தவிர பக்தர்கள் எளிதாக சென்று வர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல பெரும்பாலானோரின் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது.

பழனி அடிவாரம் கிழக்கு கிரிவீதியில் ரோப்கார் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்த ரோப்கார் சேவையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற்றது.

மீண்டும் தொடங்கியது

இந்த பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து நேற்று மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கியது. முன்னதாக ரோப்கார் நிலையத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ரோப்கார் சேவை தொடங்கியதை அடுத்து, அதில் பக்தர்கள் உற்சாகத்துடன் கோவிலுக்கு சென்று வந்தனர்.

வாலிபரால் பரபரப்பு

இந்தநிலையில் காலை 11 மணி அளவில் ரோப்கார் நிலையத்தின் பின்புறம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நடந்து சென்றார். பின்னர் திடீரென்று அந்த நபர் அருகே உள்ள பாறையில் ஏறினார். இதைக்கண்டதும் ரோப்கார் நிலைய பணியாளர்கள், காவலர்கள் உடனடியாக விரைந்து சென்று அந்த நபரை பிடித்தனர். பின்னர் அவரை பழனி அடிவாரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை சோதனை செய்தபோது மலையாள பஸ் டிக்கெட் இருந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் ரோப்கார் நிலைய பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story