கன்டெய்னர் லாரி மீது கார் மோதி ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் பலி


கன்டெய்னர் லாரி மீது கார் மோதி ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் பலி
x

ஆம்பூர் அருகே முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் பலியானார். மனைவி - மகன்கள் என 3 பேர் படுகாயமடைந்தனர்.

திருப்பத்தூர்

உறவினர் வீட்டுக்கு...

சென்னை கீழ்ப்பாக்கம் கிரீன் சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 61). ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவரது மனைவி சசிமாலா (54). மகன்கள் சரத்பாபு (33), ஆல்வின் பிரசாத் (31). இவர்கள் 4 பேரும் ஓசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று அதிகாலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை சரத்பாபு ஓட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த வடபுதுபட்டு சர்க்கரை ஆலை அருகே காலை 7 மணி அளவில் வந்த போது திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.

ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் பலி

காரில் இருந்த தியாகராஜன் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த சசிமாலா உள்பட 3 பேரையும் மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் போக்குவரத்து ரோந்து போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் தலையில் படுகாயம் அடைந்த சசிமாலா மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தில் பலியான தியாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story