ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம் கொள்ளை
கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்
கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் குடியிருப்பவர் செண்பகம் மகன் ஆறுமுகம் (வயது 73). இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இதனால் வீட்டை பூட்டிவிட்டு மனைவிக்கு உதவியாக ஆறுமுகமும் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஆறுமுகம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பதறிப்போன அவர் வீட்டிற்குள் சென்றபோது, பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன.
நகைகள், பணம் கொள்ளை
அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் தங்க கம்பல்கள், தங்க காசுகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. கொள்ளைபோன நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். ஆறுமுகம் ஆஸ்பத்திரியில் இருந்ததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பக்கத்து வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.